சென்னை: நடிகை சுனைனாவும், துபாயை சேர்ந்த யூடியூப் பிரபலம் காலித் அல் அமேரியும் ரகசிய காதல் திருமணம் செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த யூடியூப் பிரபலம் காலித் அல் அமேரி, கடந்த 6ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். கேரள மாநிலம் கொச்சியில் பிறந்தநாள் பார்ட்டி நடந்தது. அப்போது எடுத்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போட்டோவில் அவரும், நடிகை சுனைனாவும் கைகோர்த்தபடி நிற்கின்றனர். மற்றொரு போட்டோவில் அவர்களின் கைகள் மட்டும் தெரிகிறது. இந்த போட்டோக்களை திடீரென்று வெளியிட்டதன் மூலம், அவர்கள் தங்களின் காதல் உறவை உறுதி செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பிறந்தநாள் பார்ட்டியில் காலித் அல் அமேரி வெட்டிய கேக், சுனைனா விசேஷமாக ஆர்டர் செய்தது. அந்த கேக் போட்டோ இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிடப்பட்டுள்ளது.
சுனைனாவும், காலித் அல் அமேரியும் தீவிரமாக காதலித்து வருவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் தகவல் வெளியானது. அப்போது சுனைனா, ஒருவரது கையை பிடித்தபடி இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அவர் யார் என்று ரசிகர்கள் கேட்டபோது, அந்த போட்டோவை காலித் அல் அமேரி லைக் செய்தார். மேலும், சுனைனா வெளியிட்ட போட்டோவை காலித் அல் அமேரி வெளியிட்டு, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லா புகழும் இறைவனுக்கே) என்று தெரிவித்தார். இப்பதிவுகளை பார்த்தவர்கள், சுனைனாவின் காதலரும், வருங்கால கணவரும் காலித் அல் அமேரிதான் என்று முடிவு செய்தனர். தன்னை பற்றி ரசிகர்கள் பரபரப்பாக பேசுவதை அறிந்த சுனைனா, ‘எனது கடைசி இன்ஸ்டா போஸ்ட் பற்றி நிறைய செய்திகளை பார்த்தேன். எனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டிருந்தார். திருமணம் முடிவானது என்பதை உறுதி செய்த சுனைனா, தனது வருங்கால கணவர் யார் என்பதை தெரிவிக்காமல் இருந்தார்.
இந்நிலையில், தற்போது காலித் அல் அமேரி வெளியிட்ட போட்டோக்களால், அவர்தான் சுனைனாவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமகன் என்று ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் காலித் அல் அமேரியை 3.2 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். மலையாளத்தில் ‘சாத்தா பச்சா: தி ரிங் ஆஃப் ரவுடிஸ்’ என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். காலித் அல் அமேரிக்கும், சலாமா முகமது என்பவருக்கும் திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில், காலித் அல் அமேரிக்கும், சலாமா முகமதுவுக்கும் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து கிடைத்தது என்று கூறப்படுகிறத. தற்போது சுனைனாவுக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், வெப்தொடர்களில் நடித்து வருகிறார்.
