*வாகன ஓட்டிகள் அச்சம்
தேனி : தேனி நகராட்சிக்குட்பட்ட பெரியகுளம் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.தேனி நகரானது, மாவட்டத்தின் தலைநகராகவும் வர்த்தக நகராகவும் விளங்கி வருவதால் நாள்தோறும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய பெரும்பாலானோர் பேருந்துகள் மற்றும் கார் போன்ற வாகனங்கள் தவிர்த்து மோட்டார் சைக்கிள்களில் அதிகம் வந்து செல்கின்றனர்.
தேனி நகரில் மதுரை சாலை, கம்பம் சாலை மற்றும் பெரியகுளம் சாலைகள் பிரதான போக்குவரத்து சாலைகளாக உள்ளன. இதில் கம்பம் சாலை மற்றும் மதுரை சாலை ஆகியவை தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாகவும் பெரியகுளம் சாலை மாநில நெடுஞ்சாலை துறை மூலமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
தேனி நகரில் பெரும்பாலான குடியிருப்புகள் மற்றும் வர்த்தகப் பகுதிகள் பெரியகுளம் சாலையிலேயே அமைந்துள்ளன. தேனி நகர் நேரு சிலையில் துவங்கி வாரச்சந்தை, ரயில்வே கேட், பிசி கான்வென்ட், அரவிந்த் கண் மருத்துவமனை, அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, சுக்குவாடன்பட்டி, ரத்தினம் நகர் கடந்து ஊஞ்சாம்பட்டி பிரிவு வரை பெரியகுளம் சாலை உள்ளது.
இச்சாலையில் அரவிந்த் கண் மருத்துவமனையை கடந்ததும் எஸ்என்ஆர் ஜங்ஷன் தொடங்கி ஊஞ்சாம்பட்டி பிரிவு வரை சாலையின் நடுவே, இப்பகுதியைச் சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லாமல் சாலைகளிலேயே திரிய விடுகின்றனர்.
பகல் முழுவதும் பெரியகுளம் சாலையில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்து ஆங்காங்கே தொட்டிகளில் வீசப்படும் குப்பைகளை தின்று மாடுகள் வாழ்ந்து வருகின்றன. பால் கறக்கும் நேரத்தில் மாடுகளைப் பிடித்து சென்று பால் கறந்த பின்னர் மீண்டும் சாலை பகுதியிலேயே வளர்ப்போர் விட்டுவிடுகின்றனர்.
சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்லும் மாடுகள் நடுவே ஒய்யாரமாக படுத்துக் கொள்கின்றன. இம்மாடுகளால் சாலைகளில் வாகனங்களில் செல்வதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் வந்தால் திடீரென மாடுகள் மிரண்டு ஓடுவதும் சாலைகளில் செல்வோர் மீது பாய்வதுமாக உள்ளது. இது போன்ற சமயங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்லக்கூடிய பயணிகள் அச்சமடைந்து கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
தேனி நகர சாலைகளில் தெரு நாய்களின் தொல்லை பெருமளவில் இருந்து வரும் நிலையில், சமீபகாலமாக தேனி நகர் பெரியகுளம் சாலையில் வளர்ப்பு மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
போக்குவரத்திற்கு இடையூறாக தெருக்களில் திரிந்து வரும் மாடுகளையும் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நாய்களையும் கட்டுப்படுத்த வேண்டிய நகராட்சி நிர்வாகமும் கால்நடை பராமரிப்பு துறையும் போக்குவரத்து போலீசாரும் அலட்சியப் போக்கில் நடந்து கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
சாலையின் நடுவே சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து காப்பகங்களில் அடைக்கவும், மாடுகளை வளர்ப்போருக்கு உரிய அபராதம் விதிக்கவும் நகராட்சி நிர்வாகம் போக்குவரத்து போலீஸ் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
