புதுடெல்லி: அயோத்தியில் ராம ஜன்மபூமி கோயிலின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, சம்பிரதாய ரீதியாக காவிக் கொடியை ஏற்றி வைத்தார். அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 191 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவிற்காக அயோத்தி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். தொடர்ந்து, ராமர் கோவில் செல்லும் பாதையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து ராமர் கோவிலில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் அயோத்தி கோயில் மூலவர் ஸ்ரீபாலராமரை தரிசனம் செய்த பிறகு, அயோத்தி ராமர் கோவிலின் 191 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில், 22 அடி நீளம் 11 அடி அகல காவிக்கொடியை பிரதமர் மோடி ஏற்றிவைத்தார். ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.
