*சம்பா சாகுபடி பாதிக்கும் அபாயம்: வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, குமராட்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. காட்டுமன்னார்கோவில் சுற்றியுள்ள திருமூலஸ்தானம், எடையார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கி சம்பா சாகுபடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால் பயிர்கள் அழுகி, மகசூல் குறையும் அபாயம் உள்ளது.
இதைத் தடுக்க, உடனடியாக வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தேங்கிய நீரை வடித்து, பயிர்களுக்கு காற்றோட்டம் அளிப்பது அவசியம்.மேலும் இந்த மழை தொடரும் பட்சத்தில் பயிர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
இதனால் மகசூல் பாதிக்கப்படும் என இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் காட்டுமன்னார்கோவில் முக்கிய வீதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
கனமழையின் காரணமாக வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. அதன் கொள்ளளவான 47.50 அடிக்கு தற்போது 46.00 அடியை எட்டிவருகிறது. ஏரியின் பாதுகாப்பு கருதி சுமார் 1000 கன அடி மழை நீரை தற்போது சேத்தியாத்தோப்பு விஎன்எஸ் மதகு வழியாக வெளியேற்றி வருகின்றனர்.
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அதுபோல் இந்த மழை நீடிக்கும் பட்சத்தில் வீராணம் ஏரி ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
