ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் மம்ஸ் என்று அழைக்கப்படும் ‘‘கிரிசாந்தமம்’’ (செவ்வந்தி) மலர்கள் கொண்டு புதிய மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களில் 90 சதவீதம் பேர் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை சீசனுக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. பூங்கா முழுவதிலும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதனை பராமரித்து வருகின்றனர். அதேபோல் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு நாள்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பூங்கா மலர்களின்றி காட்சி அளிக்கிறது.
இந்நிலையில் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் தொட்டிகளில் மலர்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. பால்சம், பிகோனியோ, சைக்ளோமென் போன்ற மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ‘‘கிரிசாந்தமம்’’ என்று அழைக்கப்படும் செவ்வந்தி மலர்கள் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. குளிர்ச்சியான காலநிலையில் இந்த செடிகள் செழித்து வளர கூடியது. தற்போது பல வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்து காணப்படுகிறது. கண்ணாடி மாளிகை முழுவதும் இந்த மலர் செடிகளை கொண்டு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மலர்கள் பார்ப்பதற்கு அழக்காக உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.
