தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக சாக்ரல் நியூரோமோடுலேஷன் சிகிச்சை: நலமுடன் இருக்கும் சிறுமி

சென்னை: பிறவி முதல் சிறுநீர்க் கட்டுப்பாட்டு செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ‘சாக்ரல் நியூரோமாடுலேஷன்’ சிகிச்சை இலவசமாக நடத்தப்பட்டது. இப்போது இச் சிறுமி நலமுடன் உள்ளார். தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனையில் இச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது இதுவே முதல் முறை. கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுமி, பிறவி முதல் சிறுநீர்க் கட்டுப்பாட்டு செயலிழப்பால் சிறுகுழாய் (catheter) மூலமாகவே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். சிறுமியை பரிசோதனை செய்ததில் கட்டுப்பாட்டு செயலிழப்பு (Neurogenic bladder) என்ற நோய் கண்டறியப்பட்டது.

அதற்காக சாக்ரல் நியூரோமோடுலேஷன் (Sacral neuromodulation) எனும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மேலும், இந்த அறுவை சிகிச்சை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படுவதாகவும். அதற்கான செலவு ரூ.25 லட்சம் வரை ஆகும் என்றும் தெரிவித்தனர். வறுமை காரணமாக நோயாளியின் பெற்றோர் தமிழக அரசின் உதவியை நாடினர். அந்த சிறுமி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் சாந்தராம் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பாஸ்கர் ஆகியோரின் மேற்பார்வையில், அறுவை சிகிச்சைக்காக இன்ஸ்டிட்யூட் ஆஃப் யூராலஜியில் அனுமதிக்கப்பட்டார்.

அச்சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சாக்ரல் நியூரோமோடுலேஷன்எனும் அறுவை சிகிச்சையை இரண்டு கட்டங்களாக செய்ய வேண்டும் என தெரிவித்தனர். முதல் கட்டமாக டாக்டர் திருவருள் (சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணர் மற்றும் துறைத்தலைவர்), டாக்டர் எழில்சுந்தர் (சிறுநீரக அறுவைசிகிச்சை பேராசிரியர்), டாக்டர் ராகவேந்திரன் (மூளை நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர்), டாக்டர் மீரா ராகவன் (நுண்ணியியல் அறுவைசிகிச்சை நிபுணர்) ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அந்த அறுவை சிகிச்சை முடிவடைந்த நிலையில், சிறுமி எந்தத் தடையுமின்றி இயல்பாக சிறுநீர் கழித்தார்.

எனவே முதல் கட்ட அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சையில் மின்கருவியை உடலுக்குள் பொருத்தி, பதினைந்து ஆண்டுகள் செயல்படக்கூடிய பேட்டரியையும் இணைத்து வெற்றிகரமாக செய்து முடித்தனர் இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்கு பிறகு, சிறுமி கருவியின் உதவியுடன் எளிதாக சுயகட்டுப்பாட்டில் சிறுநீர் கழித்தார். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் ஏழரை லட்சம் ரூபாய் செலவானது. அந்த செலவை முழுமையாக தமிழ்நாடு அரசு ஏற்றது. இந்த அறுவை சிகிச்சை தென்னிந்தியாவில் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட முதல் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: