சென்னை: காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த மக்களுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசினார். ஆனால், தமிழகத்திற்கு தேவையான கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு பற்றியோ, எஸ்ஐஆர் குறித்தோ அவர் வாய் திறக்கவில்லை. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நேற்று காலை தமிழக வெற்றி கழகத்தின் காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக, இந்த கூட்டத்தில் பங்கேற்க 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தொலைக்காட்சி நிருபர்கள் மற்றும் பத்திரிகை செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கைக் குழந்தைகளுடன் வந்த பெண்களை உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் வாக்குவாதம் செய்தனர்.
கலந்துரையாடலில் பங்கேற்க க்யூஆர் கோடுடன் நுழைவு சீட்டு வழங்கப்பட்ட 2 ஆயிரம் பேரில் குறைவானவர்களே முதலில் வந்திருந்தனர்.
இதனால் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டென்ஷனில் கட்சி நிர்வாகிகளிடம் ‘ஏன் அதிகளவு கூட்டம் வரவில்லை’ என கேட்டு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால், நேரம் ஆக ஆக க்யூஆர் கோடுடன் அழைக்கப்பட்டவர்கள் வந்து சேர்ந்தனர். முன்னதாக காரில் வந்திறங்கிய தவெக தலைவர் விஜய், நிகழ்ச்சி துவங்கும் வரை கல்லூரி வளாகத்தில் உள்ள தனியறையில் தங்கியிருந்தார்.
காலை 10.50 மணியளவில் விஜய் கல்லூரி வளாக ஆடிட்டோரியத்துக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் பேசியதாவது: ஆட்சிக்கு வந்தவுடன் எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்கணும், ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்கணும், காரும் தான் லட்சியம். அதற்குண்டான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தனும்.
வீட்டில் இருக்கிற ஒருவரும் டிகிரி படிச்சிருக்கணும், நிரந்தர வருமானம் கிடைக்கணும் அதுக்கு உண்டான வேலைவாய்ப்பினை உருவாக்கணும், கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்யணும், அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் பயமின்றி நம்பி போகும்படி மாத்தணும். இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட்ல கவனம் செலுத்தணும்.
இதை எப்படி செயல்படுத்த போறோம் என்று தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரியப்படுத்துவோம். தவெக தொண்டர்களை தற்குறி என்கிறார்கள்.. தவெகவினர் தற்குறிகள் கிடையாது.. தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆனால், தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டமான கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிராகரிப்பு மற்றும் எஸ்ஐஆர் குறித்து விஜய் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரங்க மேடையில் பல்வேறு தலைவர்களின் படங்கள் இருந்தபோதிலும், பேரறிஞர் அண்ணாவின் புகைப்படம் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட மக்கள் கொந்தளித்தனர்.
