அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; முதலிடம் பெற்ற பாலமுருகனுக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு!

 

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி காலை தொடங்கி மாலை நிறைவடைந்தது. புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 12 சுற்றுகள் நடைபெற்று நிறைவு பெற்றது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 22 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடம் பிடித்தார். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், 8வது சுற்று வரை 16 காளைகளை அடக்கி அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி தொடர்ந்து முதலிடம் வகித்தார்.

பின்னர், ஒரே சுற்றில் 18 காளைகளை அடக்கி வலையங்குளம் பாலமுருகன் முதலிடத்திற்கு முன்னேறினர். அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார். அவனியாபுரம் ரஞ்சித் 16 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 937 காளை அவிழ்க்கப்பட்டுள்ளன. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 57 பேர் காயமடைந்தனர். மாடுபிடி வீரர்கள் 27 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 21 பேர், பார்வையாளர் 9 பேர் என 57 பேர் காயமடைந்தனர். முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது.

சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. 17 காளைகளை பிடித்து 2வது இடம் பிடித்த அவனியாபுரம் கார்த்திக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வான அவனியாபுரம் விருமாண்டி பிரதர்ஸ் காளைக்கு டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. 2வது இடம் பிடித்த காளையின் உரிமையாளர் ஜி.ஆர்.கார்த்திக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், முதலிடம் பெற்ற பாலமுருகன் பேட்டியளிக்கையில் கூறியதாவது; போட்டி மிகவும் கடுமையானதாக இருந்தது, முதலிடம் பிடித்ததன் மூலம் கனவு நிறைவேறியது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: