மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளூர்: தொடுகாடு ஊராட்சியில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தமிழ்நாடு அரசு வழிகாட்டுதலின்படி பாரம்பரிய முறையில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கோலப்போட்டிகள், உரியடித்தல் உள்ளிட்ட கிராமிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் பல்வேறு அரசு திட்டங்களில் வீடுகள் வழங்கப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த 240 பழங்குடியினர்களுக்கு இலவச பட்டா வழங்கி தற்போது 110 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, வீடுகள் தோறும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய வீட்டு குழாய் இணைப்பு, சாலை வசதி, விளையாட்டு மைதானம் ஆகிய அடிப்படை வசதிகள் சுமார் ரூ.7 கோடி மதிப்பீட்டில் செய்து தரப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடுகாடு ஊராட்சியில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட கலெக்டர் உரியடித்து பொங்கல் விழாவை சிறப்பித்தார். இதில் அரசு அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொது மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளுடன் சமத்துவ பொங்கல் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.

இந்த விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கே.எஸ்.யுவராஜ், உதவி இயக்குநர் (பயிற்சி) மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சௌந்தரி, நடராஜ், தனியார் கார் நிறுவன துணை பொது மேலாளர் ஷிம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: