ஐயப்பன் அவதாரம் குறித்து பார்த்தோம். அடுத்ததாக சபரிமலை ஐயப்பன் கோயிலை பற்றி பார்ப்போமா? கேரளா… கடவுள் விரும்பி வாழும் இயற்கை வளம் கொண்ட அற்புத பூமி என்பார்கள். அம்மாநிலத்தில் அடர்ந்த காடுகள், நீர்வீழ்ச்சி, பசுமை சூழ்ந்த மலைப்பரப்பு என கண்கொள்ளா காட்சிகளால், உள்ளத்தை கொள்ளையடிக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்தில்தான் சபரிமலை அமைந்துள்ளது.
பெரியாறு புலிகள் காப்பகத்தில் அமையப் பெற்றுள்ள இக்கோயிலானது, கடல் மட்டத்திலிருந்து 1,260 மீ (4,134 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 18 மலைகளுக்கு மத்தியில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்ட இக்கோயிலை பார்த்தாலே மனம் பரவசமடையும். ஆண்டுதோறும் சுமார் 4 கோடி முதல் 5 கோடி வரை பக்தர்கள் வந்து தரிசனம் செய்யும் இடமென்கின்றனர். சில நேரங்களில் கூடுகிறதே தவிர குறையவில்லை.
உலகம் முழுவதும் இருந்து சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் உலக அளவில் அதிகம் பேர் வந்து செல்லும் ஆலயங்களுள் சபரிமலைக்கும் முக்கிய இடமுண்டு. குறிப்பாக, கார்த்திகை, மார்கழி, தை – இந்த 3 மாதங்களில் வருவோர் எண்ணிக்கை மிகவும் அதிகரிக்கும். கோயிலின் மேலே நான்கு தங்க கோபுரங்கள், இரண்டு மண்டபங்கள், பலி பீடம் மற்றும் கொடிக்கம்பம் ஆகியவற்றைக் கொண்ட கருவறை உள்ளது.
இங்குள்ள ஐயப்பன் சிலை பஞ்சலோகத்தால் ஆனது என்கின்றனர். பஞ்சலோகம் என்பது ஐந்து உலோகங்கள் என பொருள்படும். சபரிமலையில் அமைக்கப்பட்டுள்ள 18 படிகளுக்கு மேல் ஏறி சென்றால் ஐயப்பன் சன்னதியை அடையலாம். அங்கு ஐயப்பன் அறிவில் சிறந்தோரை கை விரல்களால் அடையாளம் காட்டும் சின் முத்திரையோடு, ஒரு துண்டு போன்ற ஆடையால் முழங்காலை சுற்றி கட்டி, குத்துக்காலிட்ட நிலையில் காட்சியளிக்கிறார்.
இதுபோன்ற நிலையில் அமர்ந்திருப்பது மிக மிக அரிதான நிலையாகும். ஏனிந்த கோலம் என்பதை பின்னர் விரிவாக பார்ப்போம். கோயில் வளாகத்தில் எந்த ஆலயத்திலும் முதன்மையானவராக திகழும் கன்னிமூல கணபதிக்கு தனி சன்னதி உள்ளது. அருகில் மஞ்சள்மாதா எனப்படும் மாளிகைபுரத்தம்மனுக்கு தனி சன்னதி இருக்கிறது. சபரிமலைக்கு மாலை அணிந்தும், அணியாமலும் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர்.
ஆனால், முறையாக விரதமிருந்து இருமுடி கட்டிச் செல்லும் பக்தர்களே 18 படிகளின் மீதேறி செல்ல முடியும். மற்றவர் 18 படிகளின் வழியாக ஏறிச் செல்ல அனுமதியில்லை. 18 படி என்பது ஐயப்பனை தரிசிக்க செல்லும் பாதை மட்டுமல்ல… ஒவ்வொரு படியும் ஒவ்வொருவிதமான அர்த்தங்கள், தத்துவங்களை கொண்டிருக்கிறது. அதனைப்பற்றி பார்ப்போமா? தரிசனம் தொடரும்
