திருப்பூரில் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை

திருப்பூர், ஜன.7: திருப்பூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் இல்லை. இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன் வலியுறுத்தினார். பறவை காய்ச்சல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 53  முட்டை கோழிப்பண்ணைகளில் 12,62,346  முட்டை கோழிகளும், 2407 கறிக்கோழி பண்ணைகளில் 1,37,22,354 கறிக்கோழிகளும், 10,97,579 நாட்டுக்கோழிகளும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் இன்றைய நிலவரப்படி பறவைக்காய்ச்சல் நோய் இல்லை. கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவுவதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளை சம்மந்தப்பட்ட கால்நடை உதவி மருத்துவர்கள் தினமும் பார்வையிட்டு அசாதாரண இறப்பு  மற்றும் பறவைக்காய்ச்சல் அறிகுறி உள்ளதா? என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மாவட்டத்தில் மொத்தம் 39 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.  மனிதர்களில் பறவை காய்ச்சல் நோய் அறிகுறி ஏதேனும் தென்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளுக்கும், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) தகவல் தெரிவிக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள கோழி இறைச்சிக்கடைகளில் சுகாதாரமான முறையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், இறைச்சிக்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள கோழிகளில் அசாதாரண இறப்பு ஏதேனும் இருந்தால் அது குறித்து  கால்நடை பராமரிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

வனப்பகுதிகளில் உள்ள பறவைகள் அசாதாரண இறப்பு ஏற்பட்டால் உடனடியாக கால்நடை பராமரிப்புத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். வெளிநாட்டு பறவைகள் ஏதேனும் வருகிறதா? என்பதையும்  மாவட்ட வன அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் விஜயகார்த்திகேயன்  அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பாரிவேந்தன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்திரகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: