விரித்த வெள்ளைக் கம்பளமாய் நட்சத்திர ஏரி; கொடைக்கானலில் கொட்டுது பனி: கடுங்குளிரால் சுற்றுலாப் பயணிகள் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானலில் பனி கொட்டி கடுங்குளிர் வீசுவதால் பொதுமக்களும், சுற்றுலா வந்த பயணிகளும் அவதிப்படுகின்றனர். திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌த்தில் உள்ள கொடைக்கானல் மலைகளின் இளவரசி என அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த சுற்றுலாத் தலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பனிக்காலம் நிலவும் நிலையிலும் இயற்கையின் அழகை ரசிக்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

கொடைக்கானல் ம‌லைப்ப‌குதியில் கடந்த சில நாட்களாக காலை, மாலை வேளைகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் குளிரின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்நிலையில், நேற்று மழை பெய்யவில்லை. ஆனால், இரவில் பனிமூட்டம் சூழ கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். முக்கியச் சாலைகள், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இன்று அதிகாலை கொடைக்கானல் ந‌ட்ச‌த்திர‌ ஏரி முழுவ‌தும் ப‌னி ப‌ட‌ர்ந்து விரித்த வெள்ளைக் க‌ம்ப‌ள‌ம் போல காண‌ப்ப‌ட்ட‌து. காலை வேளையில் ஏரி நீரின்மீது சூரிய ஒளி படர்ந்தபோது ப‌னி மூட்டம் ஆவியாகி சென்ற‌ காட்சி ர‌ம்மியமாக இருந்தது. அப்போது ஏரிச் சாலையில் ந‌டைப‌யிற்சியில் ஈடுப‌ட்டிருந்த உள்ளூர் ம‌க்க‌ளும், சுற்றுலாப் பயணிகளும் இந்த காட்சியை கண்டுரசித்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கொடைக்கானலில் இன்று மழை இல்லை. இதமான சூழல் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் கிளைமேட்டை ரசித்து வருகின்றனர்.

Related Stories: