மானாமதுரை கோயிலில் உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா

மானாமதுரை, ஜன.7: மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் உலக ஜீவராசிகளுக்கு சிவன் பார்வதி சுவாமிகள் படியளக்கும் விழா கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது. நேற்று மார்கழி அஷ்டமி திதி என்பதால் அதிகாலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சிக்குப்பின் ஆனந்தவல்லி, சோமநாதருக்கு பன்னீர், பால், சந்தனம், திரவியம் உள்ளிட்ட 23 சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ரிஷப வாகனத்தில் சோமநாதர், பிரியாவிடை, ஆனந்தவல்லி அம்பாள் சிறப்பு அலங்காரத்துடன் திருமண்டபத்தில் பக்தர்களுக்கு எழுந்தருளிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் அஷ்டமி சப்பரத்தில் ஆனந்தவல்லியும், சோமநாதசுவாமி, பிரியாவிடையும் தனித்தனி சப்பரங்களில் சிறப்பு அலங்காரத்துடன் காட்சியளித்தனர். அலங்கரிக்கப்பட்ட சப்ரம் பாகபத்அக்ராஹாரம், பெருமாள் கோயில் வீதி, தெற்கு, வடக்கு உள்ளிட்ட நான்கு ரதவீதிகளில் திருவீதி உலா வந்தது. சுவாமி அம்பாள் வீதி உலாவின்போது பக்தர்கள் சுவாமி வலம் வரும் பாதையில் எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கு உணவாக அரிசி, நவதானியங்களை தூவினர். கீழமேல்குடி, கால்பிரவு கிராமத்தினர் மற்றும் மானாமதுரை நகர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழா உருவான வரலாறு... உலக ஜீவராசிகளுக்கு படியளந்த சிவன் உலகை ஆளும் சிவன் உலகில் படைக்கப்பட்ட ஜீவராசிகளுக்கு தினமும் உணவு படைத்து வந்துள்ளார். சிவபெருமான் அனை த்து ஜீவராசிகளுக்கும் உணவு படைக்கிறாரா? என்பது குறித்து பார்வதி தேவிக்கு சந்தேகம் எழுந்தது. அவரை சோதிக்க எண்ணிய பார்வதி தேவி ஒரு மூடப்பட்ட பாத்திரத்தில் ஒரு எறும்பை பிடித்து சிவனுக்கு தெரியாமல் ஒளித்து வைத்திருந்தாராம். அப்போது சிவனிடம் பார்வதி தேவி அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு அளித்தீர்களா? என்று கேட்டுள்ளார். சிவனும் ஆமாம் என்று சொன்னாராம்.

உடனே தன்கையில் வைத்திருந்த பாத்திரத்தை காண்பித்து இந்த பாத்திரத்தில் ஒரு எறும்பு உள்ளது அதற்கும் அளித்தீர்களா? என்று கேட்டாராம். அதற்கு சிவன் பாத்திரத்தை திறந்து பார் என்றாராம். பார்வதி பாத்திரத்தை திறந்து பார்த்தபோது பாத்திரத்தினுள் இருந்த எறும்புக்கும் சில அரிசிகள் உணவாக படைக்கப்பட்டிருந்ததாம். இந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் மனிதர்கள் உணவளிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று படியளந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Related Stories: