அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சியை கண்டித்து வீடுகளில் கருப்புக்கொடி வில்லாபுரத்தில் பரபரப்பு

அவனியாபுரம், ஜன. 7: மதுரை வில்லாபுரத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே வில்லாபுரத்தில் உள்ளது மீனாட்சி நகர், மாநகராட்சியுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட 62வது வார்டான இப்பகுதியில் குடிநீர், சாலை, பாதாள சாக்கடை என எந்த அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்த மழையால் இப்பகுதி முழுவதும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்களும் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அடிப்படை வசதிகள் செய்து தராத மாநகராட்சியை கண்டித்து இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தை துவக்கியுள்ளனர். இனிமேலும் தாமதம் செய்யாமல் மாநகராட்சி அதிகாரிகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என இப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: