திருவெறும்பூர் அடுத்த பனையகுறிச்சியில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுகம் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்பு

திருவெறும்பூர், ஜன.7: திருவெறும்பூர் அருகே உள்ள பனையகுறிச்சியில் கிராம விழிப்புணர்வு காவலர் அறிமுக விழா நேற்று நடந்தது. விழாவிற்கு திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன் தலைமை வைகித்து பேசியதாவது: கிராம விழிப்புணர்வு காவலர் மத்திய மண்டலத்தில் கிராமம் தோறும் நியமிக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பனையங்குறிச்சி ஊராட்சியில் கிராம விழிப்புணர்வு காவலராக பாலாஜி என்ற காவலரை இக்கிராம மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம். இப்பகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து அவரிடம் முறையிடலாம். அவர் அதற்குரிய நடவடிக்கை எடுப்பார். மேலும் கிராமங்களில் ஆடு, மாடு, கோழி, தேங்காய் போன்ற சிறிய பிரச்னைகள் எல்லாம் முற்றி கொலை அளவிற்கு சென்று விடுகிறது. இதனால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதுடன் சில உயிரிழப்புகளும், பலர் தண்டனையும் பெறுகின்றனர். இதனை தவிர்க்க கிராம விழிப்புணர்வு காவலர்களிடம் இப்பிரச்னை குறித்து சொன்னால், அவர் தீர்வு காண்பார் என்றார்.

விழாவில் திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா, எஸ் பி ஜெயச்சந்திரன், ஏடிஎஸ்பி மணிகண்டன் மற்றும் திருவெறும்பூர் டிஎஸ்பி சுரேஷ்குமார், திருவெறும்பூர் உட்கோட்டத்திற்கு உட்பட்ட போலீசார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: