20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஇஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் தகவல்

புதுக்கோட்டை,ஜன.6: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று சிஇஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் தெரிவித்தார். தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக கட்டிடத்தில் போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டத்தலைவர் அழகப்பன் தலைமை வகித்தார்.மாநில தீர்ப்புக் குழு உறுப்பினர் கண்ணன்,மாவட்ட மூத்தோரணி அமைப்பாளர் ராசேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டச் செயலாளர் செல்வராசு வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் சண்முகநாதன் பேசுகையில், ஜாக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் பங்குபெற்ற ஆசிரியர் அரசு ஊழியர்களின் மீது பழிவாங்கிடும் வகையில் புனையப்பட்டுள்ள குற்றவியல் வழக்குகள் ,தொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர்,அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள ஊதியப் பிடித்தங்கள்,பறிக்கப்பட்டுள்ள ஆண்டு ஊதிய உயர்வுகள் தேர்வுநிலை, சிறப்பு நிலை ஊதியங்கள் மற்றும் பதவி உயர்வுகள் போன்றவற்றை திரும்ப வழங்கிட வேண்டும்.புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினை தொடர்ந்திடல் வேண்டும்.ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்கிடல் வேண்டும். தமிழ்நாட்டு மாணவ,மாணவிகளின் மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் அகில இந்திய பொதுமருத்துவ நுழைவுத்தேர்வு( நீட்) முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும். தமிழக முதல்வர் ஆசிரியர் அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர்களோடு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்திடல் வேண்டும். எனவே இது போன்ற 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில முழுவதும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு இன்று (6ம் தேதி) கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.கூட்டத்தில் மன்றத்தின் மாநில,மாவட்ட,ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: