×

பாகிஸ்தானில் புதிய பாதுகாப்பு படை தலைவர் பதவி: இம்ரான்கான் கட்சி கடும் எதிர்ப்பு; நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், பாகிஸ்தானில் உள்ள முப்படைகளின் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் புதிய பாதுகாப்பு படை தலைவர் பதவியை உருவாக்கும் வகையிலும் சர்ச்சைக்குரிய 27வது அரசியலமைப்பு திருத்த மசோதா பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தானின் செனட் சபை அங்கீகரித்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா மீதான விவாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 2 நாட்களாக நடந்தது.

இந்த மசோதாவுக்கு சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மசோதாவின் நகல்களைக் கிழித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மீது வீசினர். அதை தொடர்ந்து அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன்பின்னர் நடந்த ஓட்டெடுப்பில் சர்ச்சைக்குரிய 27வது அரசியலமைப்பு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது.

இந்த புதிய மசோதா அடிப்படையில் இனி பாகிஸ்தான் அரசு ஆயுதப் படைகளை சேர்ந்தவர்களுக்கு பீல்ட் மார்ஷல், விமானப்படை மார்ஷல், அட்மிரல் ஆப் தி ப்ளீட் பதவிகளுக்கு பதவி உயர்வு அளிக்க முடியும். பீல்ட் மார்ஷலின் பதவி மற்றும் சலுகைகள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். அதே நேரத்தில் தற்போதுள்ள உச்ச நீதிமன்றம் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை மட்டுமே கையாளும். இந்த மசோதா மூலம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுள்ள தற்போதைய ராணுவ தளபதி அசிம் முனீர் விரைவில் புதிய பாதுகாப்பு படை தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

* அதிக அதிகாரம் பெறுகிறார் அசிம் முனீர்
பாகிஸ்தானின் புதிய பாதுகாப்பு படை தலைவராக நியமிக்கப்பட இருக்கும் அசிம் முனீர் இனிமேல் முப்படைகளை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெறுகிறார். இதற்கு முன்பு பாக். அதிபர் அந்த அதிகாரத்தை வைத்து இருந்தார். மேலும் இந்த மாத இறுதியில் ராணுவ தளபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் அவர் புதிய பாதுகாப்பு படை தலைவராகிறார். மேலும் பீல்ட் மார்ஷல் பதவி என்பது வாழ்நாள் வரை என்று கூறப்பட்டுள்ளதால், அசிம் முனீர் உயிருடன் இருக்கும் வரை அனைத்து அதிகாரமும் அவர் வசம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Tags : SECURITY FORCE ,PAKISTAN ,IMRANKAN PARTY ,Islamabad ,Pakistani Parliament ,Supreme Court of Pakistan ,Security ,
× RELATED அமெரிக்க கால்பந்து வீரர் உடனான மாடல்...