ஜனவரி 6ம்தேதி முதல் செய்துங்கநல்லூரில் பழைய இடத்தில் வாரசந்தை அதிகாரிகள் தகவல்

செய்துங்கநல்லூர், ஜன. 4: செய்துங்கநல்லூரில் புதன்கிழமை வாரசந்தை வருகிற 6ம்தேதி முதல் பழைய இடத்தில் நடைபெறுகிறது. செய்துங்கநல்லூரில் புதன்கிழமை தோறும் வாரசந்தை நடைபெறும். இங்கு 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பார்கள். நெல்லை-திருச்செந்தூர் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் வைத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் சந்தையை மேம்படுத்தும் பணி துவங்கியது. இதனால் வியாபாரிகள் அனைவருமே சாலைக்கு வந்ததால்  போக்குவரத்து நெரிசல் அதிகமானது.

கொராேனா காரணமாக மார்ச், ஏப்ரலில் சந்தை நடைபெறவில்லை. இதனால் சந்தையை மேம்படுத்தும் பணி தொய்வின்றி நடந்தது. சமுதாய நலக்கூட பகுதியிலும் பேவர்பிளாக்  அமைத்தல், கழிவறைகளை சீரமைத்தல் போன்ற பணிகள் நடந்தது. கொராேனா தளர்வுக்கு பிறகு சந்தை மீண்டும் துவங்கியது. சந்தைக்குள் வேலை நடந்ததால் வியாபாரிகள் நடைபாதையிலும், மெயின் ரோட்டிலும் வியாபாரம் செய்தனர். கடந்த சில வாரங்களில் வியாபாரிகள் வரத்து அதிகரித்ததால் செய்துங்கநல்லூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. சந்தை பகுதி விபத்து பகுதியானது. சந்தை பணி முடிந்ததால் மீண்டும் சந்தைக்குள் வியாபாரம் நடத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், செய்துங்கநல்லூர் பஞ்.தலைவர் பார்வதிநாதன், யூனியன் ஆணையாளர் செல்வி, கூடுதல் ஆணையாளர் பாக்கியலீலா, பொறியாளர் சித்திரை, விவசாயிகள் சங்க தலைவர் குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். அதில், வருகிற 6ம்தேதி முதல் சந்தையை பழைய இடத்துக்குள் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. அதன்பின் மீன், கருவாடு, காய்கறி, பழம், இனிப்பு வியாபாரிகளுக்கு தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களை சந்தைக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அடுத்த வாரம் முதல் மெயின்ரோட்டில் யாராவது கடை வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

 செய்துங்கநல்லூரில் புதன்கிழமை மட்டுமின்றி தினமும் அதிகாலை 5 மணிக்கு சந்தையின் வெளியே சாலையோரத்தில் மொத்த வியாபாரிகள் மீன்களை விற்கிறார்கள். அவர்களிடம் 200க்கு மேற்பட்ட சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கி செல்கிறார்கள். அப்போது மீன் கழிவுகளை அங்கேயே கொட்டி செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அவர்களையும் சந்தைக்குள் கொண்டு வந்து மீன்களை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சேர்மன் கோமதி ராஜேந்திரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

Related Stories: