ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வினை 2,418 பேர் எழுதினர்

ராமநாதபுரம், ஜன.4: ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வு நேற்று அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடந்தது. இந்த மையங்களுக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வில் பங்கேற்க மொத்தம் 4,464 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 2,418 பேர் (54.16 சதவிதம்) மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். தேர்வு பணிகளுக்காக மொத்தம் 16 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுத்திட 2 பறக்கும் படை குழுக்கள், ஒவ்வொரு தேர்வு கூடத்திற்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம் 16 ஆய்வு அலுவலர்களும் நியமிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. தேர்வில் பயன்படுத்தப்பட்ட விடைத்தாள்கள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கொண்டு செல்வதற்கு மூடிய பட்டய வாகனத்திற்கு ஆயுதம் ஏந்திய காவல் பாதுகாப்புடன் ஒரு துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் மற்றும் ஒரு சார்பு ஆய்வாளர் நிலை அலுவலர் உடன் பாதுகாப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு விதித்துள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடைமுறைகள் முறையே கடைபிடிக்கப்பட்டன என்றார்.

இந்த ஆய்வின்போது, சார் ஆட்சியர் சுகபுத்ரா உடனிருந்தார்.

Related Stories: