கேரள-தமிழக இரு மாநில பேருந்து போக்குவரத்தை மீண்டும் துவக்க வலியுறுத்தல்

கூடலூர், ஜன.1: நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளான நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், நம்பியார்குன்னு, பாட்டவயல் வழியாக தமிழக அரசு பேருந்துகள் கேரளாவுக்கும், கேரள அரசு பேருந்துகள் தமிழக பகுதிகளுக்கும் வந்து சென்றன. இதனால் இரு மாநில மக்களுக்கும் பெரும் பயன் உள்ளதாக இருந்தது.  இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இரு மாநில போக்குவரத்து கடந்த மார்ச் மாத இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர். தற்போது பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடக-தமிழக அரசு பேருந்துகள் நீலகிரி மாவட்டத்திற்கும் கர்நாடக பகுதிகளுக்கும் இருமாநில பேருந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரள-தமிழக பகுதிகளுக்கான போக்குவரத்து இன்னமும் துவங்காமல் உள்ளது. கேரளா பகுதிகளில் இருந்து தமிழக எல்லைப் பகுதிகளான பாட்டவயல் நம்பியார்குன்னு, சேரம்பாடி மற்றும் தாளூர் எல்லைகள் வரை கேரளா பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் நாடுகாணி கீழே நாடுகாணி வழியாக உள்ள சாலையில் இதுவரை பேருந்து போக்குவரத்து முழுமையாக துவக்கப்படவில்லை. பொதுமக்கள் அதிகம் உபயோகப் படுத்தும் இந்த சாலையில் பேருந்து போக்குவரத்து தற்போாது வரை தொடங்கப்படாமல் உள்ளது. தனியார் வாகனங்கள் சரக்கு லாரிகள் அனைத்தும் இந்த வழிகளில் இயங்கிவரும் நிலையில் இரு மாநில அரசுப் பேருந்துகளை விரைவாக இயக்க தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: