சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த பேட்டி: வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரசாரத்தின் மூலம் குறுகிய மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார். ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, பூரி ஜெகந்நாதர் கோயிலின் சாவி தமிழ்நாட்டில் இருக்கிறது என்று சொல்லி, தமிழர்கள் எல்லாம் திருடர்களைப் போல ஒடிசா மக்கள் மத்தியில் சித்தரித்துக் காட்டினார் மோடி. இதேபோல பீகாரில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், குறிப்பாக திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் மையப்படுத்தி மோடி பேசியிருக்கிறார். இந்த தமிழ்நாட்டில் எங்கேயாவது பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால், அவர் வழக்கு போடட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி 11.19% பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பீகாரை 15 முதல் 20 ஆண்டுகாலம் ஆண்ட பாஜவாலும், அதன் கூட்டணியாலும் அங்கே வளர்ச்சி ஏற்படவில்லை. இதை மக்கள் கேட்கப் போகிறார்கள் என்பதற்காகவே மோடி இப்படி திசை திருப்புகிறார். சென்னையில் 30-40% மக்கள் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள். தொழிலாளர்களும் நிம்மதியாக, எந்தவிதமான கவலையும் இல்லாமல் இரவு நேரத்தில் கூட வேலை செய்துவிட்டுச் செல்கிறார்கள். இவ்வளவு பாதுகாப்பாக ஆட்சி நடத்துகிற முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பதை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
பீகார் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏனென்றால், நாடாளுமன்ற தேர்தலில் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்தும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கோ, திமுக கூட்டணினுடைய செல்வாக்கோ குறையவில்லை. ஒழுங்காக பீகாரில் வேலைவாய்ப்பை அளித்திருந்தால், அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் வரப்போகிறார்கள். நீங்கள் உங்கள் மக்களைக் காப்பாற்ற தவறியதற்கு எங்கள் மீது பழிபோடுவதா. தமிழ் மண் பீகார் மக்களைக் காப்பாற்றுகிற மண். இவ்வாறு அவர் கூறினார்.
