ரூ.4.50 கோடி கொள்ளை வழக்கில் 5 பேர் கைது 123 சவரன் நகைகள் ரூ.13 லட்சம் பறிமுதல்: தலைமறைவான 12 பேருக்கு போலீசார் வலை

காஞ்சிபுரம், நவ.1: காஞ்சிபுரம் அருகே தனியார் கொரியர் நிறுவன டிரைவர்களை கடத்தி, கத்திமுனையில் மிரட்டி ரூ.4.50 கோடி கொள்ளையடித்த வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்த 5 பேர் கைதான நிலையில், அவர்களிடமிருந்து 123 பவுன் தங்க நகைகள், ரூ.13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 12 பேரை தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே போர்வலி பகுதியை சேர்ந்தவர் ஜெத்தீன் (56). இவர், தனது சகோதரருடன் சேர்ந்து 2017ம் ஆண்டில் இருந்து கொரியர் நிறுவனம் நடத்தி, அதன் வாயிலாக கமிஷன் அடிப்படையில் இந்தியா முழுவதும் பணம் மற்றும் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம்தேதி தன்னுடைய நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.4.50 கோடி பணத்தை, காரில் உள்ள லாக்கரில் வைத்து, தங்கள் நிறுவனத்தின் டிரைவர்களான பியூஸ்குமார், தேவேந்திர படேல் ஆகியோர் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. இவர்கள், பணத்துடன் பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலையில் சவுகார்பேட்டையை நோக்கி, ஆட்டுப்புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றுக்கொண்டு இருந்தனர். அப்போது, பதிவெண் தெரியாத 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், பணத்துடன் சென்ற காரை தடுத்து நிறுத்தி கத்தி முனையில், டிரைவர்களுடன் காரை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து, ஜெத்தின் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த பொன்னேரிக்கரை போலீசார், இவ்வழக்கு சம்மந்தமாக பொன்னேரிகரை மற்றும் சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், 2 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கடந்த 24ம்தேதி பொன்னேரிகரை இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் தலைமையிலான சிறப்பு குழு, 2 கார்களில் வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், ஒடுவன்காடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(39), முண்டக்கல் வீடு ஜெயன்(எ) கோடலி ஜெயன்(45), கொல்லம் தாலுகா சுஜிலால்(36), அரிச்சநல்லூர் மாவட்டம் ரிஷாத்(27), பாலக்காடு மாவட்டம், நாகலாச்சேரி குஞ்சி முகமது(31) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரையில், இக்கொள்ளை சம்பவத்தில் மேலும் 12 பேர் ஈடுபட்டடது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட பணத்திலிருந்து வாங்கிய 123 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.13 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைதான 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவான 12 குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: