நாகை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச உற்சவம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நாகை,டிச.31: நாகை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முற்பிறவியில் பெருமாள் பக்தனாக இருந்து, அடுத்த பிறவியில் யானையாக பிறந்திருந்தது. இது கஜேந்திரன் என்ற யானை ஆகும். இந்த யானை ஒரு சமயம் முதலையின் பிடியில் சிக்கியது. அப்போது தன்னைக் காப்பாற்ற வருமாறு பெருமாளை அழைத்து யானை கஜேந்திரன் கூக்குரலிட்டது. யானை கஜேந்திரனின் முற்பிறவி பக்தியின் பயனாக, பகவான் விஷ்ணு உடனடியாக அங்கு தோன்றி, முதலையை அழித்து, யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார் என்பது கஜேந்திர மோட்ச ஐதீகம். இந்த ஐதீகப்படி இந்த நிகழ்ச்சி நாகை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் குளத்தில் கஜேந்திர மோட்சம் உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். இதன்படி நேற்று கஜேந்திர மோட்ச உற்சவசம் நடந்தது. இதற்காக, சவுந்தரராஜப் பெருமாள் கோயில் குளத்தில் யானை, முதலை, தாமரை போன்ற பொம்மைகள் மிதக்க விடப்பட்டிருந்தது. யானை கஜேந்திரனை, முதலை துரத்துவதை போலவும், வானத்தில் இருந்து பெருமாள் வந்து முதலையை கொன்று, கஜேந்திரன் யானையை காப்பாற்றுவதை போலவும் கயிறுகளை கட்டி பொம்மைகள் இயக்கப்பட்டன. முதலையை பெருமாள் கொல்வதைப் போல, கரையில் அட்டையில் செய்து வைக்கப்பட்டிருந்த ஒரு முதலை பொம்மை வெடித்துச் சிதற செய்யப்பட்டது. இதையடுத்து, சவுந்தரராஜப் பெருமாள் மற்றும் நவநீத கிருஷ்ணன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Related Stories: