வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப்பை முன்மொழிய போவதாக ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆசியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சியை நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, மேற்காசியாவில் அமைதியை ஊக்குவிக்கும் வகையில் டிரம்ப் மேற் கொண்ட நடவடிக்கைகளுக்கு சானே தகாய்ச்சி பாராட்டு தெரிவித்தார். தாய்லாந்து- கம்போடியா இடையேயான அமைதி ஒப்பந்தம் தொடர்பாகவும் டிரம்பை அவர் பாராட்டினார்.
நோபல் அமைதி பரிசுக்கு டிரம்பை முன்மொழிய போவதாக சானே தகாய்ச்சி கூறியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் தெரிவித்தார். இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு கிடைக்கவில்லை. இஸ்ரேல், கம்போடியா மற்றும் தாய்லாந்து நாடுகள் அவரை வெளிப்படையாக ஆதரித்து இந்த கவுரவத்திற்கு பரிந்துரைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.
