அங்காரா: துருக்கி நாட்டின் பாலிகேசீர் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு உள்ளூர் நேரப்படி 10.48 மணியளவில் சிந்திர்கி நகரை மையமாகக் கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானதாக அந்நாட்டு பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 6 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு உருவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இஸ்தான்புல், பார்சா, மனிசா மற்றும் இஸ்மிர் மாகாணங்களில் உணரப்பட்டது.
தொடர் அதிர்வுகள் குறித்த அச்சத்தால், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சிந்திர்கியில் ஆள் இல்லாத 3 கட்டிடங்கள் மற்றும் இரண்டு மாடி கடை ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிடங்கள் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் என்பதோடு, இங்கு ஆட்கள் யாரும் இல்லாததால் பெரும் அசாம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பீதியினால் ஏற்பட்ட சம்பவங்களில் சுமார் 22 பேர் காயமடைந்தனர். இது வரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
