சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. இதில் செயற்குழு உறுப்பினர்கள் சுமார் 88 பேர் கலந்து கொள்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக மேலிட பார்வையாளர் கிரீஷ் சோடங்கரும் கலந்து கொள்கிறார்.செயற்குழு குறித்து காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை தேர்தலை சந்திப்பதும் குறித்தும், காங்கிரஸ் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் செயற்குழு கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும்.
மேலும் 77 கட்சி மாவட்டங்களுக்கும் புதிய மாவட்ட தலைவர்களை வருகிற டிசம்பர் மாதத்துக்குள் நியமிக்க டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய விரைவில் குழுவும் வர இருக்கிறது. இதுபற்றியும் விவாதிக்கப்படும். மேலும், வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மண்டங்களில் ராகுல் காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள வரவுள்ளார். அதுபற்றி விவாதிக்கவும், குறிப்பாக தேர்தல் தொடர்பான முக்கிய முடிவுகளும் செயற்குழுவில் எடுக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
