பாக்குடி துணை மின்நிலையத்திலிருந்து கூடுதல் மின்விநியோகம்

விராலிமலை, டிச.30: விராலிமலை அருகே உள்ள பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து கூடுதல் மின்சாரம் விநியோகத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி, பேராம்பூர் ஊராட்சிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பாக்குடி துணை மின் நிலையத்திலிருந்து கூடுதல் மின்சாரம் வழங்கும் நிகழ்வினை துவக்கி வைத்து பேசியதாவது, தமிழக அரசு தடையற்ற மின்சாரம் மற்றும் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வரும் பகுதிகளுக்கு சீரான மின்விநியோகம் வழங்கி வருகிறது. அதன்படி பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி மற்றும் பேராம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு கூடுதல் மின்சாரம் வழங்கும் நிகழ்வு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வடுகப்பட்டி துணைமின் நிலையத்திலிருந்து ஆலங்குடி மற்றும் பேராம்பூர் ஊராட்சிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இதனால் 21 கி.மீட்டர் தூரத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்ததால் 190 வாட் மின்சாரம் இப்பகுதி பொதுமக்களுக்கு கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்பொழுது 3 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பாக்குடி துணைமின் நிலையத்திலிருந்து உதய் திட்டத்தின் கீழ் ரூ.4.73 லட்சம் மதிப்பீட்டில் ஆலங்குடி, பேராம்பூர் ஊராட்சிகளுக்கு 21 மின்மாற்றிகள் மூலம் கூடுதல் மின்சாரம் வழங்கப்படுகிறது.

இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு தினமும் 240 வாட் மின்சாரம் வழங்கப்படும். இதன் பயனாக குறைமின் அழுத்தம் சரி செய்யப்பட்டுள்ளது. இதன் பயனாக 260 விவசாய மின் இணைப்புகளும், 985 வீடு மற்றும் பிற மின் இணைப்புகளும் பயன்பெறும் என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சந்தோஷ்குமார், செயற்பொறியாளர்கள் மயில்வாகனன், முருகன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், உதவிப் பொறியாளர் சத்தியசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: