அய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி கட்சி எம்எல்ஏ லால்ரின்ட்லுவாங்கா, கடந்த ஜூலை 21ம் தேதி காலமானார். இதனால் அவர் பதவி வகித்த தம்பா தொகுதிக்கு வரும் நவம்பர் 11ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அம்மாநில முதல்வர் லால்துஹோமா தேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபடுவதாக மிசோ தேசிய முன்னணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அதில், “தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தம்பா தொகுதிக்கு ரூ.700 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டங்களை முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார்.
மேலும், விவசாயிகளுக்கு மஞ்சள் பதப்படுத்தும் இயங்திரங்கள் தருவதாக அறிவித்துள்ளார். இதேபோல் முதல்வரின் ஆலோசகரான டாக்டர் லோரெய்ன் லால்பெக்லியானா சின்சா, தேர்தல் நடத்தை விதிகளை மீறி தம்பா பகுதியில் இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். எனவே முதல்வர் மற்றும் அவரது ஆலோசகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
