சென்னை: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆர்.எஸ்.பாரதி (திமுக): சென்ற நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில், சிறுபான்மை மக்கள், இஸ்லாமியர்கள் வாழ்ந்த பகுதிகளில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தவர்கள் பலருடைய பெயரை, நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில், அந்த கடைசியாக ‘பைனல் ஓட்டர்ஸ் லிஸ்ட்’ என்று வருகிற அதுதான் வாக்குச்சாவடியில் வழங்கப்படுகிறது. அதற்கும் ஏற்கனவே இருந்த வாக்காளர் பட்டியலுக்கும் பார்த்தால், பல இடங்களில் சிறுபான்மை இஸ்லாமியர் வாழுகிற பகுதியில் வாக்குகள் நீக்கப்பட்டதை நானே நேரடியாக பல இடத்தில் கண்டேன். இதுபோன்ற தில்லுமுல்லுகள் தேர்தல் கமிஷனில் இந்தியா பூராவும் நடக்கிறது.
தமிழ்நாடும் அதற்கு ஒன்றும் விதிவிலக்கு அல்ல. திமுக மட்டுமல்ல, அனைத்து கட்சிகளும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த வாக்காளர் பட்டியலில் கவனமாக இருக்கிறார்கள். ஆகவே, மற்ற மாநிலங்களில் நடந்த தவறுகளை போல, பீகாரில், மகாராஷ்டிராவில், ஒடிசாவில், கர்நாடகாவில் ஏன் மேற்குவங்கத்தில் கூட நடைபெற்றதை போல, தமிழ்நாட்டில் நடக்காத வண்ணம் திமுக மிக எச்சரிக்கையாக இந்த தேர்தலில் செயல்படுவதற்கு எல்லாவிதமான ஆக்கப்பூர்வமான பணிகளையும் துவக்கி விட்டோம்.
பாஜ (வானதி சீனிவாசன்): சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை அரசியல்மயமாக்க வேண்டும் என்பதற்காக, தொடர் தோல்விகளால் மக்களுக்கு என்ன முகத்தைக் காட்ட முடியாது என்று தவித்துக் கொண்டிருக்கிற காங்கிரஸ், இந்த தேர்தல் ஆணையத்தை இப்பொழுது டார்கெட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் இது வருகிறது என்றால், தமிழ்நாட்டில் வழக்கமாக தேர்தல் நேரத்தில் நடப்பதுதான் தேர்தல் ஆணையம் பண்ணிக் கொண்டிருக்கிறது, புதுசா எதுவும் இல்லை. யார் வாக்காளர்களாக வேண்டும் என்பது சட்டத்தில் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கிறது.
18 வயது ஆகி இருக்க வேண்டும், இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட வருடம் அந்த முகவரியில் வசிக்க வேண்டும். இந்த விஷயத்தை யார் பூர்த்தி செய்தாலும் அவர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளலாம். யாரையாவது நீக்கினால், அவர்களுக்கு தேர்தல் ஆணையமே தவறாக நீக்கப்பட்டதை எதிர்த்து ஒரு படிவத்தை கொடுத்து அவர்கள் திரும்ப சேர்ந்துக்கலாம். இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்போது, எஸ்ஐஆர் பார்த்து எதற்கு பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தேர்தல் ஆணையம் நடத்தும் இந்த வாக்காளர் சீரமைப்புப் பணி என்பது ஒரு சாராருக்காக இருக்கக் கூடாது. பீகாரில் என்ன நடந்ததோ, ஜார்க்கண்டில் என்ன நடந்ததோ, அது தமிழ்நாட்டில் நடப்பதற்கு விடமாட்டோம் என்று உறுதி எடுத்திருக்கிறார்கள். இந்த அடிப்படையில், இந்த எஸ்ஐஆர் தேர்தல் வாக்காளர் சீர்திருத்த முறை எதை வைத்து இவர்கள் செய்கிறார்கள்? தேர்தல் ஆணையம் ஏற்கனவே பல மாநிலங்களில் தவறு செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறோம். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் எந்த தவறும் நடக்காமல் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த முன்னெடுப்பை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வடமாநிலங்களில் இருந்து நிறைய பேர் இருக்கிறார்கள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இவர்கள் எப்படி பார்க்கப் போகிறார்கள்? குறிப்பாக, பட்டியலின மக்களும், பழங்குடியின மக்களும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை மக்களும் வாக்காளர் பட்டியலில் இருந்து எடுக்கிறார்கள் என்ற செய்தியும் பரவிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, தேர்தல் ஆணையம் மிகவும் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை யாருக்கும் இல்லை இப்பொழுது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இதை விழிப்போடு பார்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
