சென்னை: ஏரி திறப்பை பற்றி மக்கள் பிரதிநிதியான நான் அதிகாரிகளிடம் கேட்டால் குற்றமா என்று செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சட்டநாத கரையாளர் 116ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது படத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரியை என்னை கேட்டு திறக்க சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதியாக இருக்கிற என்னிடம் தகவல் சொல்லி இருக்கலாம் என்றுதான் சொல்கிறேன். அதிகாரிகளிடம் இதை கேட்பதை குற்றம் என்று சொல்வதா? என் மீது குற்றம் சுமத்த பார்க்கிறார்கள். மக்கள் பிரதிநிதியிடம் சொல்வது விதி இல்லை என்று நீர்வளத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள்.நீரை திறந்து விடும் போது கொண்டாட வேண்டும்.
ஆனால், அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கவுன்சிலர், சேர்மன் ஆகியோரையும் அழைக்கவில்லை. அவர்கள் அனைவரும் பட்டியலின இனத்தை சார்ந்தவர்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்கிறவர்களிடம் தகவல் சொல்ல முடியாது என்று சொன்னால், நாங்கள் மக்கள் பிரதிநிதியாக ஏன் இருக்கிறோம். நாளைக்கே வேண்டுமென்றால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போகிறேன்? எங்களுக்கு கேள்வி கேட்க உரிமையில்லையா? எங்களுக்கு இருக்கிறதே சுயமரியாதை மட்டும் தான். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, நான் போன் செய்தால் எடுப்பதில்லை.
அவரிடம் பேசி 6 மாதங்கள் ஆகிறது. தொகுதி பிரச்னை தொடர்பாக அமைச்சரிடம் தான் நான் பேசி வருகிறேன். அதிகாரிகளால் திமுக ஆட்சிக்கு நற்பெயர் களங்கம் வந்து விடக்கூடாது என்று நினைக்கிறோம். அதிகாரிகள் எதிர்வினை ஆற்றுவது எனக்கு வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், கே.விஜயன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, மகளிர் அணி தலைவி ஹசீனா சையத், இலக்கிய அணி தலைவர் பி.எஸ்.புத்தன், டி.என்.அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
