நித்யானந்தா வழக்கு: ஐகோர்ட் புது உத்தரவு

மதுரை: நித்யானந்தா வழக்கில் ஐகோர்ட் கிளை புது உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை ஆதீன மடத்தின் 292வது ஆதீனமாக அருணகிரி நாதர் இருந்த போது, அவருக்கு அடுத்தபடியாக 293வது இளைய ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்திருந்தார். இதன்பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையால் மதுரை ஆதீன மடத்தில் இருந்து நித்யானந்தாவை நீக்கி அருணகிரி நாதர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், தன்னை ஒரு பக்தராக மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென ஐகோர்ட் மதுரை கிளையில் நித்யானந்தா மனு செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா ஐகோர்ட் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார். மனு விசாரணைக்கு வந்தபோது, ‘‘மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாசா நாடு எங்கு உள்ளது? அங்கு எப்படி செல்வது’’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு நித்யானந்தா சீடர் தரப்பில், ‘‘ஆஸ்திரேலியா அருகில் யுஎஸ்கே என்ற கைலாசா தனி நாட்டில் நித்யானந்தா உள்ளார்.

இந்த நாட்டிற்கு ஐநா சபையின் அங்கீகாரம் உள்ளது’’ என கூறியிருந்தனர். இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.விஜயகுமார் ஆகியோர், ‘‘மதுரை ஆதீன மடம் தொடர்பாக ஆதீனம் மற்றும் நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரதான வழக்கு மதுரை சிவில் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

எனவே, அந்த நீதிமன்றத்தில் தனது உரிமை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ளலாம். இந்த விவகாரத்தில் ஏற்கனவே தனி நீதிபதி கூறிய கருத்துக்கள் எதுவும் மதுரை நீதிமன்ற விசாரணையை கட்டுப்படுத்தாது. அந்த நீதிமன்றம் சுதந்திரமாக விசாரிக்கலாம்’’ என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: