ஒரு இடையூறு, கஷ்டம் என்றவுடன் மக்களுக்காக நிற்காதவரை என்னவென்று சொல்வது? நடிகர் விஜய் குறித்து கருணாஸ் கடும் தாக்கு

சென்னை: மக்களுக்கு ஒரு இடையூறு, கஷ்டம் என்றவுடன் அந்த இடத்தில் போய் நிற்க தவறியவர்களை என்ன என்று சொல்வது என்று நடிகர் விஜய் குறித்து கருணாஸ் கடுமையாக தாக்கியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். முதல்வரை சந்தித்த பின்னர் கருணாஸ் அளித்த பேட்டி: ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று பார்க்கக் கூடிய முதல்வராக மு.க.ஸ்டாலின் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. ஒரு தோழமை கட்சியாக நாடாளுமன்ற தேர்தலில் நான் செய்த பணிகளை உற்றுநோக்கக்கூடிய முதல்வர், நிச்சயமாக வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் அதற்கான அங்கீகாரத்தையும் வழங்குவார் என்று நம்புகிறேன்.

பனையூரில் (விஜய் வீடு) கேட்டில் பூட்டு உள்ளே போட்டு இருக்கிறதா? வெளியே போட்டிருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். மக்களுக்கான அரசியல் என்பது மக்களுக்கானது. அந்த மக்களுக்கு பிரச்னை என்கின்ற போது, அந்த அரசியலை செய்ய நினைப்பவர்கள், மக்கள் மூலமாக அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், அந்த மக்களுக்கு ஒரு இடையூறு, கஷ்டம் என்றால் அந்த இடத்தில் போய் நிற்க வேண்டும். நிற்க தவறியவர்களை நான் என்ன என்று சொல்வது. இதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால், மக்களுக்கான பிரச்னை என்கிற போது, நள்ளிரவே அந்த இடத்திற்கு போய் மக்களுக்கான தேவைகளை உங்களுக்கு நான் இருக்கிறேன் என்று சொல்லக்கூடியவர் தான் ஒரு தலைவர், ஒரு தளபதி. மக்களுக்கான பிரச்னை என்றதும் உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை யாரும் மறக்க முடியாது. பாஜ என்றைக்கும் நேரடியாக வர மாட்டார்கள். எங்கேயாவது சந்தில் சிந்து பாடி, ஒரு பாட்டுக்கு கம்போஸ் பண்ணலாம் என்று பார்ப்பார்கள். கம்போஸ் பண்ற பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதற்கு ஒருவர் தேவை. அதற்கு நல்ல நடிகர் கிடைத்து இருக்கிறார். அதிமுக கூட்டத்தில் இன்னொரு கட்சி உடைய கொடியை ஆட்டிக் கொண்டிருப்பது தான் அதிமுகவின் அவல நிலை.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: