கோவை: ‘அதிமுக ஒன்றிணைவது குறித்து கட்சி தலைமைக்கு பத்து நாட்கள் கெடு எதுவும் விதிக்கவில்லை. ஊடகங்கள் தான் அதனை தவறாக போட்டுவிட்டனர்’ என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று வந்திருந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக ஒன்றிணைப்பு குறித்து விரைவில் நல்லது நடக்கும். மேலும், இன்று நான் செல்ல இருக்கும் திருமண நிகழ்ச்சியில் கட்சியின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறாது. நல்லதே நடக்கும். அதிமுக ஒன்றிணைய 10 நாள் கெடு என நான் சொல்லவில்லை. பத்து நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும், ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என்று தான் தெரிவித்திருந்தேன். ஆனால் மீடியாக்கள் தான் தவறாக போட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். அதிமுக என்பது ராணுவ கட்டுப்பாடுடன் இருந்த கட்சி இப்போது இப்படி ஆகிவிட்டதே என நிருபர்கள் கேட்ட போது, ‘அது உங்கள் கருத்து’ எனக்கூறி அங்கு இருந்து சென்று விட்டார்.
