அவனியாபுரம்: சென்னையில் இருந்து வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தேர்தல் பரபரப்பு இப்போதே ஆரம்பித்துவிட்டது. விஜய் கட்சி தொடங்கி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கரூரில் 7 மணிநேரம் மக்கள் காத்திருந்தது குறித்து, அவருக்கு தகவல் தெரிவித்திருப்பார்கள். கூட்ட நெரிசலால் ஏதேனும் விபரீதம் நடக்கலாம் என யூகித்து, தனது பயணத்தை அவர் சரியான முறையில் கையாண்டிருக்கலாம். நெரிசலில் 41 பேர் பலியான பதற்றத்தில் இருந்த அவர் சென்னை சென்று விட்டார். இதற்கு மாறாக திருச்சியில் தங்கியிருந்து, அடுத்த நாளேனும் சென்று பலியானோர் குடும்பத்தினருக்கு நேரடியாக இரங்கல் தெரிவித்திருக்கலாம். கரூரில் 7 மணிநேரம் வரை தண்ணீர் குடிக்காமல் இருந்த பொதுமக்கள், குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்.
அந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் ஆகியோர் இதனை தடுத்திருக்கலாம். இனிமேல் இதுபோன்ற கூட்டங்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். இந்த கரூர் சம்பவம் எதிர்வரும் தேர்தலில் எந்த கட்சிக்கு சாதமாக அமையும் என்று கேட்கிறீர்கள். யார் என்ன சொன்னாலும், 2026 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இப்போது நடத்தப்படும் கணக்கெடுப்புகள், அரசியல் யூகங்கள் போன்றவற்றால் தேர்தலில் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதனால், விஜய் வெற்றி பெறுவார் என்ற வாதத்தை ஏற்கமுடியாது. இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
* அன்புமணிக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது
‘நெல்லை, குமரி உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளங்கள் கொள்ளை நடப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். எந்த தகவலின் அடிப்படையில் இதுபோல் கூறினார் என தெரியவில்லை. அவர் தினந்தோறும் ஒரு அறிக்கை விடுகிறார். இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது’ என்றார் வைகோ.
