அண்ணா பல்கலைக்கழக புதிய பதிவாளராக கல்வி பாடநெறி மைய இயக்குனர் குமரேசன் நியமனம்:உயர் கல்வித்துறை தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக (பொறுப்பு) கல்வி பாடநெறி மைய இயக்குனர் வெ.குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்ட விவகாரத்தில், பல கல்லூரிகள் ஒரே பேராசிரியரை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பணிபுரிவதாகக் கணக்கு காட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் பொதுவெளியில் வந்த நிலையில், அதில் தொடர்புடைய 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது அதற்கு கல்லூரிகளும் விளக்கம் அளித்தது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அப்போது துணைவேந்தராக இருந்த வேல்ராஜ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உட்பட 11 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கூடிய அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இது குறித்து உறுப்பினர் ஒருவர் எழுப்பிய விவாதத்தின் அடிப்படையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி போலி பேராசிரியர்கள் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பதிவாளர் பிரகாஷ் உட்பட 11 அதிகாரிகள் மற்றும் அவர்கள் வகித்து வந்த கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் உறுதியாக கூறாத நிலையில் தற்போது புதிய பதிவாளர் நியமனம் செய்யப்பட்டு அவர் பதவி ஏற்று இருப்பதாக உயர்கல்வித் துறை நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பதிவாளராக (பொறுப்பு) அண்ணா பல்கலைக்கழக கல்வி பாடநெறி மைய இயக்குனர் வெ.குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: