மனித அழிவுக்கு வழிவகுக்கும் ஏஐ சூப்பர் இன்டலிஜென்சுக்கு தடை கோரும் உலக பிரபலங்கள்: இளவரசர் ஹாரி, மேகனும் இணைந்தனர்

வாஷிங்டன்: ஏஐ சூப்பர் இன்டலிஜென்ஸ் மனித அழிவுக்கு வழிவகுக்கும் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டுமென இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் உட்பட உலக பிரபலங்கள் பலரும் கடிதம் எழுதி உள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் உலகின் முன்னணி நிறுவனங்களான கூகுள், ஓபன் ஏஐ, மெட்டா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிறுவனங்கள் அடுத்த கட்டமாக, மனித மூளையை மிஞ்சும் ஏஐ சூப்பர் இன்டலிஜென்ஸ்களை உருவாக்க முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இதற்காக பிரத்யேக நிபுணர் குழுக்களை நியமித்து பல லட்சம் கோடி செலவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மனித மூளையை மிஞ்சும் ஏஐ சூப்பர் இன்டலிஜென்ஸ்களால் மனித இனத்திற்கே ஆபத்து ஏற்படும் என பல உலக பிரபலங்கள் கவலை எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்பிடம் வலியுறுத்தும் வகையில், தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் கடிதம் அனுப்பும் கையெழுத்து இயக்கத்தில் பல உலக பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

அந்த கடிதத்தில், ‘‘மனிதர்களை விட அறிவாற்றலிலும், பணியிலும் சிறப்பாக செயல்படும் ஏஐ சூப்பர் இன்டலிஜென்ஸ்களால் அதிகார இழப்பு, சுதந்திர இழப்பு, கண்ணியம், கட்டுப்பாடு இழப்பு ஆகியவை ஏற்படுவது மட்டுமின்றி தேசிய பாதுகாப்பு அபாயங்கள் முதல் மனித அழிவு வரையிலும் அபாயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. எனவே ஏஐ சூப்பர் இன்டலிஜென்ஸ் மேம்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும். அது பாதுகாப்பாகவும், கட்டுப்படுத்தக் கூடியதாகவும் செய்யப்படும் என்ற முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வரையிலும் தடையை நீக்கக் கூடாது’’ என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ள இங்கிலாந்தின் சசெக்ஸ் இளவரசர் ஹாரி தனது தனிப்பட்ட குறிப்பில், ‘‘ஏஐயின் எதிர்காலம் மனித குலத்திற்கு சேவை செய்ய வேண்டும். மனித குலத்திற்கு எதிரானதாக இருக்கக் கூடாது’’ என கூறி உள்ளார்.

அவரது மனைவி மேகனும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார். இவர்களை தவிர, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஏஐ முன்னோடியும் கணினி அறிவியல் பேராசிரியருமான ஸ்டூவர்ட் ரஸ்ஸல், கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற ஹின்டன், ஆப்பிள் இணை நிறுவனர் ஸ்டீவ் வோஸ்னியாக், இங்கிலாந்தை சேர்ந்த கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சூசன் ரைஸ் உள்ளிட்டோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Related Stories: