நாடு தழுவிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்; மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் முக்கிய ஆலோசனை: 2 நாள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள்தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் 2 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள பீகார் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. இதன் மூலம், 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு 7.42 கோடி பேர் கொண்ட இறுதிப்பட்டியல் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. பீகாரைத் தொடர்ந்து, நாடு முழுவதும்வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை நடத்த கடந்த மாதம் 10ம் தேதி டெல்லியில் ஒருநாள் கூட்டம் நடந்தது.

இதில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து, அடுத்த 10 அல்லது 15 நாட்களுக்குள் சிறப்பு தீவிர திருத்த பணிகள் அறிவிப்புக்கு தயாராகுமாறும், கடைசியாக நடந்த எஸ்ஐஆருக்குப் பிறகு வெளியிடப்பட்ட தங்கள் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலைத் தயாராக வைத்திருக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி பல்வேறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் அவர்களின் மாநிலங்களில் கடைசியாக நடத்தப்பட்ட எஸ்ஐஆருக்குப் பிறகான வாக்காளர் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், நாடு தழுவிய எஸ்ஐஆர் தொடர்பாக 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ்.சந்து, விவேக் ஜோஷி ஆகியோரும் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர். நாடு தழுவிய எஸ்ஐஆர் பணியில் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மேலும் சில மாநிலங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான முக்கிய முடிவுகள் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகளை தள்ளி வைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. இம்மாநிலங்களில் உள்ளாட்சி தேர்தல் பணியில் தேர்தல் இயந்திரங்கள் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் எஸ்ஐஆரை பிறகு நடத்தலாம் என திட்டமிடப்படுகிறது.

முதற்கட்டமாக நேற்றைய கூட்டத்தில், கடைசியாக எஸ்ஐஆருக்குப் பிறகு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தற்போதைய பட்டியலில் உள்ள வாக்காளர்களை இணைக்கும் பணிகளை தேர்தல் ஆணையம் மதிப்பீடு செய்தது. இது, பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் எஸ்ஐஆரில் எந்த ஆவணத்தையும் வழங்காமல் இருப்பதை உறுதி செய்யும். கடைசி எஸ்ஐஆருக்கு பிறகான வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பவர்கள் அது குறித்த தகவலை மட்டும் விண்ணப்ப படிவத்தில் நிரப்பி கொடுத்தால் போதும். மேலும் எஸ்ஐஆர் தொடர்பாக அரசியல் கட்சிகளால் நியமிக்கப்படும் பிரதிநிதிகள், பூத் நிலை அதிகாரிகள், முகவர்கள் ஆகியோரின் நியமனம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியின் நிலை குறித்தும் தேர்தல் ஆணையர்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

நாடு தழுவிய எஸ்ஐஆர் பணிகளை இம்மாத இறுதியில் தொடங்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 2 நாள் ஆலோசனை கூட்டம் முடிந்த அடுத்த ஓரிரு நாட்களில் நாடு தழுவிய எஸ்ஐஆர் பணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

  • தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள சட்டவிரோத குடியேறிகள், தகுதியில்லாதவர்கள், இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும், தகுதியான இளம் வாக்காளர்களை சேர்க்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது.
  • தமிழ்நாட்டில் கடைசியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் கடந்த 2002, 2005ல் நடந்தது. அப்போது தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரிகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
  •  பெரும்பாலான மாநிலங்கள் 2002 மற்றும் 2004க்கு இடையில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொண்டுள்ளன.

Related Stories: