வாஷிங்டன்: உக்ரைன் போர் குறித்து ரஷ்யாவுடன் அமெரிக்கா நடத்தவிருந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபருடன் பேசுவது வீண் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா- உக்ரைன் நாடுகள் இடையேயான போர், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இவ்விரு நாடுகளுக்கு இடையே அமெரிக்க அதிபர் மத்தியஸ்தம் செய்தும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரஷ்ய அதிபர் புடினை, டிரம்ப் சந்தித்து பேசினார். அலாஸ்காவில் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் நடக்கவில்லை.
சமீபத்தில் வாஷிங்டனில் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து புடினை நேரில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்து இருந்தார். இவர்களின் சந்திப்பு ஹங்கேரியின், புடாபெஸ்டில் நடப்பதாக இருந்தது. இந் நிலையில், இரு தலைவர்களின் சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்வோ, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் தொலைபேசியில் நேற்று முன்தினம் பேசினார். லாவ்ரோவ்- ரூபியோ உரையாடலை தொடர்ந்து புடின்-டிரம்ப் சந்திப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாக மீடியாக்களில் தகவல்கள் வந்தன.
ரஷ்ய அமைச்சர் லாவ்ரோவ் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படமாட்டாது என்று வெளிப்படையாக தெரிவித்தார். அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் மற்றும் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் குறித்த விவகாரத்தில் தன்னுடைய நிலையை அடிக்கடி மாற்றி வருகிறார். மேலும் ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவது வீண் என்றும் குறிப்பிட்டார். இதனால் புடினுடனான பேச்சுவார்த்தை இப்போதைக்கு இல்லை என்று டிரம்ப் நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருநாடுகளின் அதிபர்கள் சந்திப்பின் போது உக்ரைனுடனான போர் குறித்து இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற டிரம்பின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
