2 லட்சம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின தமிழக அரசு ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தொடர் மழையால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் மூழ்கியதால் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்றால், விவசாயிகள் கடனாளிகளாக மாறி விடுவார்கள். கடன் தான் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முதன்மைக் காரணமாக அமைகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, காவிரி பாசன மாவட்டங்களில் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல்லையும் விரைந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: