தஞ்சாவூர்: தஞ்சாவூர் காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்ட எடப்பாடி, அங்கு மழை மற்றும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேற்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு விவசாயிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடுவூர் அடிச்சேரி மற்றும் செருமங்கலம் ஆகிய இடங்களில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், நாகப்பட்டினம் மாவட்டம் கீவளூர் தாலுகா வெண்மணி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்தார்.
மேலும் திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே மழையினால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட்டார். பின்னர் எடப்பாடி நிருபர்களிடம் கூறுகையில், ‘அறுவடை செய்து விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட நெல்மணிகளுக்கு உரிய இழப்பீடும், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் உரிய கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டினை வழங்கிட வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொள்கிறோம். 22 சதவீதம் வரையில் ஈரப்பதத்துடன் கொள்முதல் செய்வதற்கு உடனடியாக ஒன்றிய அரசிடம் அனுமதியினை பெற வேண்டும்’ என்றார்.
