வைகை அணைக்கு நீர்வரத்து 20,255 கன அடியாக அதிகரிப்பு: இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்தோடும் வெள்ளம்!

தேனி: தொடர் மழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து 20,255 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே ஆண்டிப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அரசரடி, மேமலை, வெள்ளிமலை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் கேரள மாநில இயற்கை ஒட்டிய மலை பகுதிகளுக்கும் தொடர்ந்து கன மழை விட்டு விட்டு பெய்து வந்தது.

இதனால் மூலம் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு ஆற்றில் வெள்ள நீர் செல்கிறது. இதனால் ஆற்றங்கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் நீர்மட்டமான மொத்தம் 71 அடியில் அணைக்கு நீர்வரத்து வெகுவாக வந்து கொண்டிருப்பதால் விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலவரப்படி வைகை ஆற்றில் வினாடிக்கு 20,255 கன அடி தண்ணீர் வருகிறது.

அணையிலிருந்து வினாடிக்கு 1199 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 62.66 அடியாக உள்ளது. அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணை விரைவில் நிரம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சுற்றுலா பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என அப்பகுதி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மேகமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைகை ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசரடி முதல் ஆண்டிபட்டி வரை உள்ள அனைத்து கிராமங்களில் கரையோரங்களில் உள்ள பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ முயற்சிக்க வேண்டாம் என வருவாய் துறையினர் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: