நுழைவு வாயிலில் பெட்டி அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற ஏற்பாடு: அரசு வாகனங்களுக்கு மட்டும் உள்ளே அனுமதி

வேலூர், டிச.29: வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிப்பு சம்பவங்கள் எதிரொலியாக நுழைவுவாயிலில் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது. அரசு அதிகாரிகளின் வாகனங்களை தவிர மற்ற வாகனங்களுக்க தடை விதிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வந்தது. கொரோனா பரவல் காரணமாக இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் உள்ள அந்தந்த ஆர்ஐ அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து வருகிறது.

ஆனாலும், கலெக்டர் அலுவலகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வருகின்றனர். மனுக்களை அதிகாரிகள் நேரடியாக பெறாவிட்டாலும் மனுக்களை பெட்டியில் போட்டுவிட்டு செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்ேடா டிரைவர், கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால் கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அலுவலர்களின் அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நுழைவாயில் மற்றும் அலுவலக பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு அதிகாரிகளின் வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே அலுவலக வளாகத்தின் முன்பகுதியில் வழக்கமாக பொதுமக்கள் தங்களது பைக்கை நிறுத்துவார்கள். தற்போது அங்கு பைக் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகம் வரும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள் அலுவலக கட்டிடம் பின்பகுதியில் நிறுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக புகார் பெட்டியும் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை போட்டுச் செல்கின்றனர்.

இதற்கிடையில், 45 வயது மதிக்கத்தக்கவர் 2 குழந்தைகள் மற்றும் ஒருவருடன், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது கோயிலை காணவில்லை என்ற பதாகைகளுடன் மனு அளிக்க முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார், பதாகைகள் பயன்படுத்த அனுமதியில்லை என தடுத்தனர். இதையடுத்து அவர்கள் கோரிக்கை மனுவை பெட்டியில் செலுத்தினர். அவர்கள் அளித்த மனுவில், வேலூர் அடுத்த செம்பேடு கிராமத்தில் கோயிலுக்கு செல்லும் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ேகாயில் வழியையும் அடைத்துள்ளனர். எனவே கோயிலை மீட்டுத்தரவேண்டும் என தெரிவித்திருந்தனர்.

Related Stories: