பந்தலூர் அருகே அயோடின் உப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம்

பந்தலூர்,டிச.28: பந்தலூர் அருகே மழவன்சேரம்படியில் தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில், செறிவூட்டப்பட்ட உணவுகள் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கப்பாலா ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கனையேந்திரன் தலைமை வகித்து பேசியதாவது: அயோடின் பற்றாக்குறை காரணமாக முன்கழுத்து கழலை, மந்தமான செயல்பாடுகள், உடல் வளர்ச்சி குறைவான குழந்தை பிறப்பு, உடல் மற்றும் மன வளர்ச்சி இன்மை என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அயோடின் சத்து மண்ணின் மேற்பரப்பில் கிடைப்பது.

தற்போது மண் அரிப்பு, ரசாயன உரங்களை பயன்படுத்துவது காரணமாக அயோடின் சத்து குறைந்துள்ளது. இதனால், மாவிலும், 1991க்கு பிறகு உப்பிலும் சேர்த்து அரசு ரேஷன் கடையில் வழங்கி வருகிறது. இதனால் தற்போது பெருமளவு பாதிப்புகள் குறைந்து உள்ளது. எனினும் தொடர்ந்து அயோடின் கலந்த உப்பு பயன்படுத்த வேண்டும் என்றார்.  கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் கூறுகையில், செறிவூட்டபட்ட உணவுகள் இன்று அவசியமாகிறது. தேவையான ஊட்டசத்துக்கள் சேர்த்து கட்டாயம் கொடுக்க வேண்டும். அதனால் உப்பில் அயோடின், இரும்பு சத்துகள் மற்றும் ஆயில் கோதுமை உள்ளிட்டவற்றில் விட்டமின்கள் சேர்த்து வழங்கப்படுகிறது.

அயோடின் பற்றாக்குறையினால், ஏற்படும் பாதிப்புகள் உப்பு தயாரிக்கும் தமிழகத்தை விட வடமாநிலங்களில் மிக குறைவு. தவறான பிரசாரங்களை தவிர்த்து கல் உப்பு, தூள் உப்பு எதுவானாலும் அயோடின் கலந்த உப்பையே பயன்படுத்த வேண்டும். பதப்படுத்துத்தலுக்கான உப்பு அயோடின் கலக்காமல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கடைகளில் உப்பு வாங்கும்போது, கவனித்து வாங்க வேண்டும். ரேஷன் கடைகளில் கிடைக்கும் அரசு உப்பு தரமானது. குறைந்த விலையில் வாங்கி பயன்பெறலாம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் வீட்டில் பயன்படுத்தும் உப்பு மாதிரிகள் பரிசோதித்து காட்டப்பட்டது. சில கல் உப்பு வகைகளில் அயோடின் இல்லாமல் இருப்பதும், மற்ற வகை உப்புகளில் அயோடின் அளவு உள்ளத்தையும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இறுதியில் செல்வகுமார் நன்றி கூறினார்.

Related Stories: