சென்னை: தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவர் பல்வேறு கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர். தமிழரின் தொன்மையை நிலைநாட்ட நமது திராவிட மாடல் அரசு ஆற்றி வரும் பணிகளுக்கு முன்னோடியாக பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளை செய்தவர். வட்டெழுத்து கல்வெட்டுகளை சரளமாக படிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற நடன. காசிநாதன் தமிழ்நாடெங்கும் வரலாற்று கருத்தரங்குகளையும், கல்வெட்டு பயிற்சி வகுப்புகளையும் நடத்தி பல இளைஞர்களும் இத்துறையில் ஆர்வம் பெற உழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்லெழுத்து கலை, சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், இராசராசேச்சுரம் முதலிய பல தமிழ் நூல்களையும், ஏராளமான ஆங்கில நூல்களையும் எழுதியதோடு, பல நூல்களை பதிப்பித்து, தொல்லியல் ஆய்வு துறைக்கு மிகப் பெரும் பங்களிப்பை ஆற்றியவர் நடன. காசிநாதன். இவரது அளப்பரிய பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக தமிழ்நாடு அரசின் உ.வே.சா. விருது, சிறந்த நூல் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற ஆய்வுச் செம்மல் நடன. காசிநாதன். பணி ஓய்வுக்கு பின்னும், தீவிரமாக தன் ஆய்வு பணிகளை தொடர்ந்த நடன. காசிநாதன் மறைவு தொல்லியல் துறைக்கு பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தார், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
