மதுரை: மதுரை ஐயர் பங்களா பகுதியில் நடக்கும் ‘குணா குகை’ கண்காட்சியை உடனடியாக நிறுத்த உயர் நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஐயர் பங்களா பகுதியில் ’குணா குகை’ கண்காட்சியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை, உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என மாநகராட்சி சார்பில், உயர் நீதிமன்றக் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 7ம் தேதி தொடங்கிய இக்கண்காட்சிக்கு தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தீயணைப்புத்துறையினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 15 நிபந்தனைகளில் 10 நிபந்தனைகள் நிறைவேற்றப்படவில்லை என தீயணைப்புத்துறையினர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இத்தகைய சூழலில் கண்காட்சியை தொடர்ந்து நடத்த அனுமதிப்பது ஆபத்தானது; நிபந்தனைகளை கடைபிடித்த பின்னர் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் ‘குணா குகை’ கண்காட்சியை உடனடியாக நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
