காஞ்சி டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி மீதான விசாரணை அறிக்கையை ஐகோர்ட் நிர்வாகக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில் விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற நிர்வாக குழுவுக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகேஸ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சிவகுமாருக்கும் பூசிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகன், என்பவருக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், வாலாஜாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மாவட்ட நீதிபதி செம்மல், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்யுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி காவல் துறை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று மீண்டும் விசாரணை வந்தபோது, விசாரணை அறிக்கையை விஜிலன்ஸ் பதிவாளர் தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரிலேயே சம்பந்தப்பட்ட பேக்கரியை உணவு பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து, நிர்வாக ரீதியில் மாவட்ட நீதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் பணியிட மாற்றக் குழுவுக்கு அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: