ஊட்டி மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா: வருகிற 1ம் தேதி திருவீதி உலா

ஊட்டி: நவராத்திரி விழாவையொட்டி ஊட்டி மாரியம்மன் புவனேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வருகிற 1ம் தேதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஊட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா கடந்த 21ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று மாலை அம்மன் ஸ்ரீபுவனேஸ்வரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நவராத்திரியையொட்டி கோயிலில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது. இதையொட்டி பஜனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று ஸ்ரீதுர்க்கை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வருகிற 30ம் தேதி வரை அம்மன் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். வருகிற 1ம் தேதி அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

Related Stories: