தேனி பஸ் நிலையத்தில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

தேனி : தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தேனி புதிய பேருந்து நிலையம் மதுரை சாலையில் இருந்து திண்டுக்கல் செல்லக்கூடிய பை-பாஸ் சாலையில் அமைந்துள்ளது.

இங்கிருந்து திண்டுக்கல், திருச்சி, கோவை, சென்னை, போடி, மூணாறு, மதுரை நெல்லை, கன்னியாகுமரி என பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக இந்தப் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்புடன் காணப்படும்.

புதிய பஸ் நிலையத்தில் பூங்காவை தாண்டி பஸ் நிலையத்திற்குள் செல்லக்கூடிய பகுதியில் போர்டிகோ அமைக்கப்பட்டுள்ளது இந்த போர்டிகோவில் தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளுக்கானபுக்கிங் சென்டர், ஏடிஎம் மையம், பொருள்கள் வைப்பறை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் வந்து செல்வதற்கும், காத்திருப்பதற்கும் இட வசதி உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் சமீப காலமாக பயணிகளின் உறவினர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், பஸ் நிலையத்திற்குள் கடைகளை நடத்தும் வியாபாரிகள் ஆகியோர் தங்களது டூவீலர்களை நிறுத்தி செல்கின்றனர்.

இதனால் போர்டிகோ வழியாக பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் 4 இடங்களில் டூவீலர் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காப்பகங்களில் வாகனங்களை நிறுத்தாமல் பயணிகள் நடந்து செல்லும் பகுதியில் டூவீலர்கள் நிறுத்தப்பட்டு வருகிறது.

இதனை தடுத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வழி ஆக்கிரமிப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் நகராட்சி அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: