தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் அறிக்கை

தென்காசி, டிச. 22: சங்கரன்கோவிலுக்கு வரும் முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை வரவேற்க அதிமுகவினர் திரண்டு வர வேண்டுமென தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கித் தந்ததோடு, ரூ.119 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட அனுமதியும் கொடுத்துள்ளனர். ஏழை எளிய மக்களும் பொங்கலை உற்சாகமாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.2500 வழங்க உத்தரவிட்டு உள்ளனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து துறை அமைச்சர்களும் நாளை(23ம் தேதி) தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவிலில் நடைபெறும் அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழாவில் பங்கேற்க வருகை தருகின்றனர். அவர்களுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தேவர்குளம் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எனவே இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் அமைச்சர் ராஜலட்சுமி இல்ல விழா பிரமாண்டமாக அமைந்திட கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி, கிளை, வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: