கஸ்தூரி அரங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

ஈரோடு, டிச.22: ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு விழாவில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என எஸ்பி. தங்கதுரை கூறினார். ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் வரும் 25ம் தேதி பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்விழாவில், ஆண்டுதோறும் 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் காரணமாக அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கும் வகையில் அனைத்து கோயில்களிலும் விழாக்களை பக்தர்கள் கூட்டமின்றி நடத்தி கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

இதில், கஸ்தூரி அரங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழாவின் போது அதிகாலை கோயில் நிர்வாகிகள், கட்டளைதாரர்கள், அறநிலையத்துறை ஊழியர்கள் முன்னிலையில் 200 பேருக்கு மிகாமல் கலந்து கொண்டு நடத்தி கொள்ளவும், அதன்பின், மூலவர், உற்சவர், தயார் சன்னதியில் வழிபட்டு சொர்க்கவாசல் வழியாக சென்று வர ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி தங்கதுரை கூறியதவாது:

வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா நிகழ்வின்போது, கோயிலுக்குள் 200 பேருக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்து நிகழ்ச்சியை நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கலெக்டர் உத்தரவின் பேரில், சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் வழிபட ஏதுவாக நடப்பாண்டு ஆன்லைன் முறையில் விண்ணப்பித்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். www.erodeperumaltemple.org , www.erodekasthuriaranganadhar.org  என்ற இணையதளம் வாயிலாக பக்தர்கள் தங்களது ஆதார் எண் பதிவு செய்து, பதிவு செய்யப்பட்டதற்கான ரசீதின் நகலை எடுத்துக் கொண்டு அசல் ஆதார் கார்டுடன் கோயிலுக்கு வரவேண்டும்.

அதில், இணையதளம் வாயிலாக 10 ஆயிரம் பேர் வரை மட்டுமே விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேருக்கு மேல் அந்த வெப்சைட்டில் யாரும் விண்ணப்பிக்க முடியாது.  கோயிலில், ரசீதை ஸ்கேன் செய்தபின்னர், பொது தரிசனத்தில் ஒரு மணி நேரத்தில் 500 முதல் 600 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். சிறப்பு தரிசனத்திற்கு 100 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். ஒரு மணி நேரத்தல் 300 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் அபிஷேக பொருட்கள், பூஜை பொருட்கள் கொண்டு வரக்கூடாது.  கோயிலில் பாதுகாப்பு பணியில் டி.எஸ்பி. தலைமையில் போலீசார் ஈடுபடுவர். இதேபோல், அன்றைய தினத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையும் இருப்பதால் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து நடத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: